×

போதை பொருள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும்: உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை ஆலோசனை

போதை பொருள் புழக்கம், பயன்பாடுகளை  அரசு மட்டும் தடுக்க முடியாது. பொதுமக்கள், என்ஜிஓ.க்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று  உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.
பேரவையில் பெங்களூரு ஜெயநகர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சவும்யா ரெட்டி போதை பொருள் நடமாட்டம், பயன்பாடு குறித்து பேசினார். அத்துடன்  அரசின் சார்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர்   பசவராஜ்பொம்மை பதில் அளித்து  கூறுகையில், போதை பொருட்களின் புழக்கம், கடத்தல் நீண்ட காலமாக நிகழ்ந்து வருகிறது. அமைச்சர் பதவியில் இருந்து நான் விலகினாலும் இது நின்று விடாது.  2016 முதல் 2020 வரை மாநிலத்தில்  போதை பொருள் கடத்தல் தொடர்பாக 120 வழக்கு மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரம் 2020 முதல் இன்று வரை 2786 வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் ஆட்சி நடந்த ஐந்து வருடத்தில் போதை பொருள் புழக்கம் மற்றும்  கடத்தலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை விட பாஜ ஆட்சியில் அதிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையம், மருந்துகடை மூலமாகவும் போதை பொருட்கள் கிடைக்கின்றன. அத்துடன் கூரியர் மூலமாகவும் போதை பொருட்கள் வரவழைத்து பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதை தடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அதே நேரம்  போதை பொருள் கடத்தலை முற்றிலும்  தடுப்பதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.  போதை பொருள் புழக்கம் இப்போது புதிய வடிவில் மிட்டாய், சாக்லேட் போன்ற பெயரிலும் ரகசியமாக விற்பனை செய்யப்படுகின்றன.  
எனவே, போதை பொருள் வினியோகத்தை தடுப்பது மிகவும் கடினமாக மாறிவிட்டது. ஆனாலும் அரசு தொடர்ந்து போதை  பொருள் புழக்கம் மற்றும் கடத்தலை தடுப்பதற்கு சுகாதாரம், சமூக  நலத்துறைகளுடன் இணைந்து திட்டம்  வகுத்துள்ளோம். ஹூட்கா பார்களின் காரணமாக இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்கும் வகையில் ஹூட்கா பார்களுக்கு தடை விதிக்கவும் அரசு முன்வந்துள்ளது. வேறு எந்த மாநிலங்களில் ஹூட்கா பார் தடை  செய்யப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து  அதே போல் நமது மாநிலத்திலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



Tags : Basavaraj , Everyone should work hand in hand on drug eradication: Home Minister Basavaraj Puppet Advice
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...